

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா (81) மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் தெரிவித்ததால் அவர் மீது பெங்களூரு போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 52 வயதான பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘கடந்த ஜனவரியில் எனது 17 வயது மகளை 43 வயதான ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டார். இந்த வழக்கில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டி, பிப்ரவரி 2-ம் தேதி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசினேன். அவர் நடந்ததை எல்லாம் விரிவாக கேட்டுக்கொண்டு, எங்களுக்கு உதவி செய்வதாக கூறினார்.
மேலும், எடியூரப்பா போலீஸ் அதிகாரி ஒருவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். பின்னர் என் மகளிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி, தன் அறைக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து அழுதுகொண்டே வெளியே வந்த என் மகள், எடியூரப்பா தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டதாக கூறினாள். இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது, அதனை மறுத்தார். எடியூரப்பா செல்வாக்கான அரசியல்வாதியாக இருப்பதால் அவர் மீது புகார் அளிக்க அச்சமாக இருந்தது. தற்போது வழக்கறிஞரின் உதவியோடு, புகார் அளித்துள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்கு: இந்த புகாரின் பேரில் சதாசிவநகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டப் பிரிவு 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354 ஏ (பெண்ணை தாக்கி குற்றம் இழைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அரசியல் உள்நோக்கம் இல்லை: இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ''ஒரு மாதத்துக்கு முன்பு இரு பெண்கள் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அழுதுகொண்டே இருந்ததால் இருவரையும் அழைத்து பேசினேன். அவர்கள் சம்பந்தமான வழக்கில் உதவி செய்வதாக கூறினேன்.
நான் பெங்களூரு காவல் ஆணையரை செல்போனில் அழைத்து தேவையான உதவிகளை செய்யுமாறு கூறினேன். அவர்களுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தேன். இப்போது எனக்கு எதிராகவே வழக்கு போட்டிருக்கிறார்கள். இதனை சட்டரீதியாக அணுகுவேன். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்" என்றார்.
சிஐடி விசாரணைக்கு உத்தரவு: இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். சிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''என்று தெரிவித்தார்.