சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் வியாழக்கிழமை அன்று கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது. நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டுள்ளது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அவர் வீடு செல்வதாக தெரிவித்தார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். மருத்துவ வல்லுநர்கள் வழங்கும் ஆலோசனையின்படி அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும்” என எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

முன்னதாக, நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு காயத்துடன் முகத்தில் ரத்தம் வழியும் நிலையில் மருத்துவமனை படுக்கையில் மம்தா சிகிச்சை பெறும் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அவர் விரைந்து குணமடைய தங்களது பிரார்த்தனை வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அவர் விரைந்து குணம் பெற வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in