புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் நியமனம் - இருவரின் பின்புலம் என்ன?

ஞானேஷ் குமார், சுக்பிர் சிங்
ஞானேஷ் குமார், சுக்பிர் சிங்
Updated on
2 min read

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேர்வுக் குழுவில், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். இக்குழு இன்று காலை கூடி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது.

இக்குழுவின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையை ஏற்று இருவரையும் தேர்தல் ஆணையர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் முர்மு. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், புதிய சட்டப்படி இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சுக்பிர் சிங் சந்து யார்? - 1963-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த சுக்பிர் சிங் சந்து 1998-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உத்தராகண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்னதாக, உயர் கல்வித் துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தலைவராகவும் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு.

சுக்பிர் சிங் சந்து ஒரு மருத்துவர். அமிர்தசரஸில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்திருக்கிறார். அதேபோல் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

லூதியானா முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனராக பணியாற்றிய சமயத்தில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞானேஷ் குமார் யார்? - ஞானேஷ் குமார் 1988-ம் ஆண்டு கேரள கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சொந்த ஊர் உத்தரபிரதேசம். 60 வயதான இவர், இதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பணிபுரிந்துள்ளார். அமித் ஷா தலைமையின் கீழ் வரும் கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக இருந்து இருந்த ஞானேஷ் குமார் இந்த வருடம் ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், அவர் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இதைவிட, 2019 ஆகஸ்ட்டில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவை 370 ரத்து செய்யப்பட்ட போது, ​​அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

2020ம் ஆண்டில், கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்ட பின், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கம் உட்பட, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனிக்க உள்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேக துறைக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 9, 2019 அன்று உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி வகுக்கும் அறக்கட்டளையை அமைக்க உத்தரவிட்டது. அந்த நேரத்தில், உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரங்களுக்கு ஞானேஷ் குமார் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு அமைச்சகத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், மாநில கூட்டுறவு சங்கங்கள் ( எம்எஸ்சிஎஸ்) (திருத்தம்) சட்டம், 2023 இயற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தின் போது, ​​2007 - 2012 ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராக பதவி வகித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in