‘இந்தியர்களின் வாழ்நாளும் வருவாயும் உயர்வு’ - ஐ.நா பாராட்டு

‘இந்தியர்களின் வாழ்நாளும் வருவாயும் உயர்வு’ - ஐ.நா பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியர்களின் வாழ்நாளும், வருவாயும் உயர்ந்துள்ளதாக கூறியுள்ள ஐ.நா.வின் மனித வளர்ச்சிக் குறியீடு, அதற்காக பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐநா மனித வளர்ச்சிக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த 2021-ல் இந்தியர்களின் வாழ்நாள் 62.7 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது 2022-ல் 67.7 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. அதேபோல் தனிநபர் சராசரி வருவாய் 2022-ல் 6,951 டாலராக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 6.3 சதவீதம் உயர்வு.

ஒட்டுமொத்த அளவில் மனித வளர்ச்சி குறியீட்டில் 2022-ல் இந்தியாவின் மதிப்பு 0.644 ஆக உள்ளது. 193 நாடுகளில் இந்தியா 134-வது இடத்தில் உள்ளது. மனித வளர்ச்சி குறியீடு 2021-ல் குறைந்திருந்த நிலையில், 2022-ல் உயர்ந்துள்ளது. 1990-ல் இந்தியா மனித வளர்ச்சி குறியீட்டில் 0.434 புள்ளிகளைக் கொண்டிருந்த நிலையில், 2022-ல் அது பெற்றிருக்கும் புள்ளியானது 48.4 சதவீத உயர்வாகும்.

நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள், தரமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஒரு நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையில் மனித வளர்ச்சிக் குறியீடு மதிப்பிடப்படுகிறது.

"இந்தியா பல ஆண்டுகளாக மனித வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. 1990 முதல், பிறக்கும்போது ஆயுட்காலம் 9.1 ஆண்டுகள் உயர்ந்துள்ளது; பள்ளிப் படிப்பின் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுகள் 4.6 ஆண்டுகள் அதிகரித்துள்ளன; பள்ளிப் படிப்பின் சராசரி ஆண்டுகள் 3.8 ஆண்டுகள் வளர்ந்துள்ளன. இந்தியாவின் சராசரி ஆண்டு வருவாய் ஏறத்தாழ 287 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது" என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் பிரதிநிதி கெய்ட்லின் வீசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in