Published : 09 Feb 2018 07:42 AM
Last Updated : 09 Feb 2018 07:42 AM

திரிபுராவில் மோசமான ஆட்சியை வழங்கி வரும் மார்க்சிஸ்ட் அரசை தூக்கி எறியுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு

திரிபுராவில் 20 ஆண்டுக்கும் மேலாக, மோசமான ஆட்சியை வழங்கிவரும் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சோனாமுரா பகுதியில் பாஜக சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களால், ஒட்டுமொத்த நாடே வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் முயற்சியால், வடகிழக்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால், நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக திரிபுரா இருக்கிறது. வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக திரிபுரா மக்கள் இருக்கிறார்கள்.

திரிபுரா மக்களை வளர்ச்சிப் பாதையிலிருந்து விலக்கி வைத்திருப்பதே, இங்கு பல ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த மார்க்சிஸ்ட் அரசின் சாதனையாக இருக்கிறது. மாநிலத்தில் ஊழலும், வறுமையும், வேலையில்லா திண்டாட்டமுமே நிறைந்துள்ளது. வேலையின்மை காரணமாக திரிபுராவில் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

இத்தகைய அவலங்கள் மாநிலத்தில் தொடர வேண்டும் என நீங்கள் (மக்கள்) விரும்புகிறீர்களா? மாணிக் சர்க்காரின் ஆட்சி மேலும் தொடருமேயானால், திரிபுரா என்றுமே வளர்ச்சியடையாது. திரிபுராவையும், அதன் மக்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலில், பாஜகவை நீங்கள் வெற்றிப்பெறச் செய்தால் திரிபுரா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையும். இதற்கு, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதற்கு பாஜகவுக்கு வாக்களியுங்கள். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, மோசமான மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியை வழங்கிவரும் மாணிக் சர்க்கார் அரசை தூக்கி எறியுங்கள். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x