இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடியிடம் இருக்கிறது: அமித் ஷா

இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடியிடம் இருக்கிறது: அமித் ஷா
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் ஏ கிரேடு தரம் கொண்டவை. அதோடு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் அவரிடம் இருக்கிறது. வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு ஏற்ற திட்டத்தை பிரதமர் கொண்டிருக்கிறார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மிகச் சிறந்த நாடாக ஆக்குவதற்கான தீர்மானத்தை 130 கோடி மக்களின் துணையோடு அவர் மேற்கொண்டிருக்கிறார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் தங்கள் ஆதரவையும், உறுதியையும் அவருக்கு வழங்கி இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் பாஜக அரசியல் சாசன திருத்தத்தில் ஈடுபடும் என எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் எப்போதெல்லாம் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெறுகிறோமோ அப்போதெல்லாம் பொறுப்புடன் ஆட்சி நடத்தி வருகிறோம். ஒருபோதும் நாங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்திய காலத்தில் அனைத்தும் சரியாக நடந்தனவா? சுய கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் இன்றி நாங்கள் செயல்பட்டால் மக்கள் எங்களை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள். எங்களால் தொடர முடியாது.

குடியுரிமை திருத்தச் சட்டம் விஷயத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் என அனைவரும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். பாஜகவின் திட்டம் தெளிவானது. அதன் அடிப்படையில்தான் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கரோனா பாதிப்பு காரணமாகவே அதனை அமல்படுத்துவது தாமதமானது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே பாஜக இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்துள்ளது.

அரசியல் ரீதியில் இதனால் ஆதாயம் அடைவோம் அல்லது இழப்பை சந்திப்போம் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை. தாஜா செய்யும் அரசியல் மூலம் தங்கள் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க தற்போது எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த நாட்டுக்குமான சட்டம். இது அமல்படுத்தப்படும் என நான் 41 முறையாவது கூறி இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in