

புதுடெல்லி: சிஏஏ-வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை உறுதி செய்வது இறையான்மை சார்ந்த உரிமை. அதில் எந்த சமரசமும் செய்யப்படாது. சிஏஏ-வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. சிஏஏ யாருடைய குடியுரிமையும் பறிக்காது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். 2019-லேயே நாங்கள் அதனை நிறைவேற்றிவிட்டோம். கரோனா பரவலால் அதை அமலாக்குவது தடைபட்டது.
ஆகையால் இதில் அரசியல் ஆதாயம், நட்டம் என்ற பேச்சுக்கு எல்லாம் இடமில்லை. எதிர்க்கட்சிகளுக்கு இதைவைத்து சமாதான அரசியல் செய்து வாக்கு வங்கியை நிறைக்க வேண்டும். சிஏஏ தேசத்துக்கான சட்டம். இச்சட்டம் அமலுக்கு வரும் என்று நான் சுமார் 41 முறையாவது கூறியிருப்பேன்.
இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் சிஏஏ எதிர்ப்பு கருத்துகள், ஆட்சிக்கு வந்தால் சிஏஏவை திரும்பப் பெறுவோம் என்று கூறி வருகின்றனர். முதலில் இண்டி கூட்டணிக்கு தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற முழு நம்பிக்கை இருக்கிறதா?. சிஏஏவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ளது. அதனைத் திரும்பப் பெறுவது எளிதல்ல. நாங்கள் இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன்மூலம் சிஏஏவை ரத்து செய்ய விரும்புவோர் ஆட்சிக்கே வர இயலாது.
இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்து நாங்கள் வாக்குவங்கி அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சியினருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. ஆனால் பிரதமர் மோடியின், பாஜகவின் வரலாறு வேறு. பாஜக சொல்வதும், பிரதமர் பேசுவதும் கல்வெட்டில் எழுதிய வார்த்தைகள் போன்றது. மோடியின் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். சிஏஏவையும் நாங்கள் தேர்தலை சந்திக்கும் முன் நிறைவேற்றியுள்ளோம்.
துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல்களில் கூட நாங்கள் அரசியல் செய்வதாக அவர்கள் பேசினார்கள். அதற்காக நாங்கள் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க இயலுமா? ராகுல் காந்தி, மம்தா, கேஜ்ரிவால் என எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் பொய்யிலான அரசியல் செய்கிறார்கள்.