Published : 14 Mar 2024 09:13 AM
Last Updated : 14 Mar 2024 09:13 AM

பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் சீட் மறுக்கப்பட்ட 21% சிட்டிங் எம்.பி.க்கள்: பின்னணி என்ன?

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று (மார்ச் 13) வெளியிட்டது. இரு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட 267 வேட்பாளர்களில் 21 சதவீதம் சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி என்னவென்று பார்ப்போம்.

வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் முன்னர் தொகுதிவாரியாக கள நிலவரத்தை பாஜக மேலிடம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், சில சிட்டிங் எம்.பி.க்கள் மீது நிலவும் அதிருப்தி அலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை இலக்காக பாஜக கொண்ட நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பதில் பாஜக மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக பாஜக தேர்தல் உத்திக் குழு வட்டாரம் தெரிவிக்கின்றது.

முன்னதாக, மார்ச் 2-ல் வெளியிடப்பட்ட பாஜக முதல் வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களில் பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதூரி, பர்வேஷ் வர்மா உள்பட 33 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நேற்று வெளியிடப்பட்ட 72 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 30 சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாஜகவின் இரு வேட்பாளர்கள் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 140 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 67 சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மட்டும் 7 எம்.பி.க்களில் 6 சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனோஜ் திவாரிக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அறிவிக்கப்பட்ட 20 வேட்பாளர்களில் 11 சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 19 சீட்களில் 14 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 20, குஜராத்தில் 7, ஹாியாணா மற்றும் தெலங்கானாவில் தலா 6 பேர் மற்றும் மத்தியப் பிரதேசம், இமாச்சல், திரிபுரா, தாத்ரா நாகர்ஹவேலி உள்ளிட்ட 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் 21 சதவீத சிட்டிங் எம்.பி.க்களுக்கு பாஜக வாய்ப்பு மறுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x