

எப்.எம். ரேடியோக்களில் எம்.பி.க்களை கேலி, கிண்டல் செய்யும் அறிவிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான ஜெயாபச்சன் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார்.
‘தனியார் எப்.எம். ரேடியோ சேனல்களின் அறிவிப்பாளர்கள், எம்.பி.க்களின் குரல்களை மாற்றிப் பேசி கிண்டல் செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஜெயாபச்சன் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜாவடேகர், ‘இது மிகவும் முக்கியமான பிரச்சினை. சிலர் இரட்டை அர்த்தங்களுடனும் பேசுகிறார்கள். இதன் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.
வட இந்திய மாநிலங்களில் ஒலிபரப்பாகும் தனியார் எப்.எம். ரேடியோக்களில் பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. அதில், “நாடாளுமன்றத்தின் செய்தி வாசிப்புகள்” என்ற பெயரில் எம்பிக்களை கேலி கிண்டல் செய்து ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அதை கண்டித்து ஜெயாபச்சன் மாநிலங்களவையில் குரல் எழுப்பியுள்ளார்.