“பாக்., வங்கதேச மக்களுக்கு பாஜக கதவைத் திறந்து விட்டுள்ளது” - கேஜ்ரிவால் குற்றச்சாட்டு @ சிஏஏ

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்
Updated on
1 min read

புதுடெல்லி: சிஏஏ மூலம் பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை பாஜக திறந்து விட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரித்துள்ளார். மேலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்பட்டுள்ள இதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து கவனம் திசைத் திருப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் 7.27 நிமிட வீடியோ செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பாஜக, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை இச்சட்டம் திறந்து விட்டுள்ளது. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது; இதற்கான விலையை அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் கொடுக்க வேண்டியதாக இருக்கும். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் ஏற்கெனவே அசாமின் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளது. தற்போது பாஜக இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க விரும்புகிறது.

பாகிஸ்தானியர்களை இந்தியாவில் குடியேற்றுவதற்கு அரசின் பணம் பயன்படுத்தப்படும். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் சுமார் 2.5 முதல் 3 கோடி பேர் வரை சிறுபான்மையினர்களாக உள்ளனர். இந்தியா தனது கதவுகளைத் திறந்தவுடன் அந்த நாடுகளில் இருந்து அந்த மக்கள் இந்தியாவுக்குள் வருவார்கள்.

அவ்வாறு வரும் அகதிகளுக்கு யார் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள். ஏதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது? வாங்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்யப்படுவதாக சிலர் சொல்கிறார்கள். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் அவர்கள் (பாஜக) சிஏஏ பற்றி பேசுகிறார்கள். இந்த 10 ஆண்டுகளில் அவர்கள் நல்லது செய்திருந்தால் சிஏஏ-வுக்கு பதிலாக அவர்களின் செயல்களைச் சொல்லி வாக்கு கேட்கலாமே?.

பணவீக்கமும், வேலையில்லாதிண்டாட்டமும் இன்று நாடு சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள். அதிகரித்து வரும் பணவீக்கத்தால் குடும்பத்தை நடத்துவதே சிரமமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது." இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in