“வாக்குகளை வளைக்கவே சிஏஏ அமல்” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

“வாக்குகளை வளைக்கவே சிஏஏ அமல்” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 2019 டிசம்பரில் சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் பிடித்துள்ளது.

நியாயமாக பார்த்தால் மசோதா கொண்டு வந்த 3 முதல் 6 மாதங்களுக்குள் அதை சட்டமாக்கி அமல்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் பாஜக அப்படிச் செய்யவில்லை. சட்டத்தை அமல்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தில் 9 முறை கால அவகாச நீட்டிப்பை மத்திய அரசு கேட்டது.

இதுவெறும் தேர்தல் நேர உத்தி. மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் வாக்குகளைக் குவிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஒன்றிணைத்து வாக்குகளை கவர பாஜக கொண்டு வந்துள்ள அஸ்திரம்தான் இந்த சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் திட்டம். இந்த சட்டத்தை அவர்கள் ஏன் 2020-ம் ஆண்டே கொண்டு வரவில்லை? தேர்தல் நடைபெற ஒரு மாதமே உள்ள நிலையில் ஏன் அதை இப்போது கொண்டு வரவேண்டும்? சமூகங்களை ஒன்றிணைத்து வாக்குகளைப் பெறும் அரசியல் தந்திரம்தான் இது.

நமது பிரதமர் மோடி அடிக்கடி ஒரு கருத்தை சொல்வார். பாஜக அரசு காலக்கெடுவை நிர்ணயித்து அதன்படி திட்டங்களை அமலாக்கும்; எந்த ஒரு திட்டமும் தாமதம் ஆகாது என்று அவர் அடிக்கடி கூறுவார். அப்படியானால் இந்த சட்டத்தை அமலாக்க 4 ஆண்டுகள் 3 மாதங்கள் ஆனது ஏன்? இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, இது பாஜக தலைமையிலான மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி. மக்களவைத் தேர்தலில் மக்களைப் பிரித்து வாக்குகளைப் பெற நினைக்கும் பாஜகவின் அப்பட்டமான முயற்சிதான் இது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in