

நொய்டா: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதனிடையே, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சீமாஹைதர் என்ற பெண் பாகிஸ்தானில் தனது முதல் கணவர் குலாம் ஹைதரை பிரிந்து கடந்த ஆண்டு இந்தியா வந்து சச்சின் என்பவரை மணந்து நொய்டாவில் வசித்து வருகிறார். பாகிஸ்தானிலிருந்து தனது நான்கு குழந்தைகளுடன் கடந்தாண்டு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடிபுகுந்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது குறித்து சீமாஹைதர் தனது 4 குழந்தைகள் மற்றும் கணவர் சச்சினுடன் சேர்ந்து நின்று நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்த சட்டத்தை இந்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்திய அரசுக்கு வாழ்த்துகள். உண்மையாகவே தனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றிவிட்டார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பேன். இந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில், எனது குடியுரிமை தொடர்பாக சட்டப்போராட்டம் நடத்திய எனது சகோதரரும் வழக்கறிஞருமான ஏ.பி.சிங்குக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம், ராதே ராதே, பாரத் மாதாகி ஜே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீமா ஹைதரின் சகோதரர் ஏ.பி. சிங் கூறும்போது, ‘‘பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட வெவ்வேறு மதத்தினர் எப்படியோ இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இத்தனை நாட்கள் இந்திய குடியுரிமை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கெல்லாம் இது ஒரு மகத்தான நாள்’’ என்றார்.