Last Updated : 12 Mar, 2024 08:03 PM

5  

Published : 12 Mar 2024 08:03 PM
Last Updated : 12 Mar 2024 08:03 PM

பாஜகவின் கேரள ‘நம்பிக்கை’... யார் இந்த அனில் அந்தோணி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

அனில் அந்தோணி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், 195 பேர் அடங்கிய பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனில் அந்தோணி குறித்து பார்ப்போம். கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி மகனான அனில் அந்தோணி, மத்திய கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். தந்தை ஏ.கே.அந்தோணி காங்கிரஸின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர். தீவிர காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பாஜகவுக்கு ஐக்கியமாகி தற்போது மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார் அனில் அந்தோணி.

பத்தனம்திட்டா தொகுதி: தென் மாநிலங்களில் தடம் பதிக்க தீவிரம் காட்டி வரும் பாஜக இம்முறை கேரளாவில் இரண்டு இலக்க தொகுதிகள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளாவில் மாநிலம் முழுவதும் கவனம் செலுத்தாமல், குறிப்பிட்ட சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் மட்டும் தீவிர கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியில்தான் அனில் அந்தோணி களமிறக்கப்பட்டுள்ளார்.

மகன் அனில் அந்தோணியை எதிர்த்து ஏ.கே.அந்தோணி பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய அனில் அந்தோணி, பாஜகவில் சேர்ந்தவுடன் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவரை பத்தனம்திட்டா தொகுதியில் வேட்பாளராக பாஜக அறிவித்ததற்குப் பின்னால் கிறிஸ்தவ வாக்குகளை ஈர்க்கும் வியூகம் உள்ளது.

அனில் அந்தோணி கவனம் பெற்றது ஏன்? - சோனியா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவர் ஏ.கே.அந்தோணி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதோடு, கேரள மாநிலத்தின் காங்கிரஸின் முகமாகவும் அறியப்படுகிறார். தனக்கு வயதானதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏ.கே.அந்தோணி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். மூன்று முறை கேரளத்தில் முதல்வர் பதவியில் இருந்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

இவரது மகனான அனில் அந்தோணி திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி டெக் படித்தவர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முடித்தவர். காங்கிரஸில் இணைந்த இவர், கட்சியின் கேரள மாநில சமூக ஊடகப் பிரிவு தலைவராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியது.

அந்தச் சமயத்தில், மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் கேரளா முழுவதும் திரையிடப்படும் என அம்மாநில காங்கிரஸ் கட்சி கூறி இருந்தது. இதற்கு எதிரான கருத்தை அனில் அந்தோணி தெரிவித்திருந்தார். இது, கேரள அரசியலில் பெரிதும் கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி 25-ல் அனில் அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

காங்கிரஸிலிருந்து விலகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் அனில் அந்தோணி. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான அனில் அந்தோணி, கட்சியில் இணைந்ததன் மூலம் கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆதரவு கூடும் என பாஜக நம்பிக்கைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே கட்சியில் இணைந்தவுடன் பொறுப்பும், தற்போது எம்.பியாக போட்டியிடும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அன்னையின் ஆசிர்வாதம்: கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கிருபாசனம் மரியன் கத்தோலிக்க தேவாலயத்தில் ஏ.கே. அந்தோணியின் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த தேவாலயத்தின் யூடியூப் சேனலில் அந்தோணியின் மனைவி எலிசபெத் தனது கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். அதில் தனது மூத்த மகன் அனில் முடிவு குறித்தும் பேசியிருந்தார்.

அதில் அவர், “எனது மூத்த மகன் அனிலுக்கு இப்போது 39 வயதாகிறது. தந்தையை போன்று அரசியலில் ஈடுபட அவர் விரும்பினார். ஆனால், எனது கணவர் அந்தோணி, அனில் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. வாரிசு அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை தீர்மானம் நிறைவேற்றியதால் எனது மகனின் கனவு கேள்விக்குறியானது.

இந்த நேரத்தில் பாஜகவில் இணையுமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனிலுக்கு அழைப்பு வந்தது. உடனே நான் தேவாலயத்துக்கு சென்று பாதிரியார் ஜோசபை சந்தித்து ஆலோசனை கேட்டேன். அப்போது அவர், ‘பாஜகவில் அனில் இணையக் கூடாது என பிரார்த்திக்க வேண்டாம். பாஜகவில் அனிலுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது’ என்று கூறினார்.

இதன்பிறகு நான் பிரார்த்தனை செய்தபோது பாஜக மீதான வெறுப்புணர்வு மறைந்தது. மேரி மாதா எனக்கு புதிய இதயத்தை கொடுத்தார். மேரி மாதாவின் அருளால்தான் அனில் பாஜகவில் இணைந்தார். எனது மகன் பாஜகவில் இணைந்ததை ஏ.கே.அந்தோணி விரும்பவில்லை. எனவே, அவரது மனமாற்றத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன். அந்த வேண்டுதலும் நிறைவேறியது. அனில் வீட்டுக்கு வந்தபோது எனது கணவர் நிதானத்துடன் செயல்பட்டார். வீட்டில் அரசியல் பேசக் கூடாது. குடும்பம் வேறு, அரசியல் வேறு என்று அவர் கூறினார்” என்று எலிசபெத் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

மும்முனைப் போட்டி: கடந்த மாதம் தனது கட்சியான கேரள ஜனபக்‌ஷம் (மதச்சார்பற்ற) கட்சியை பாஜகவுடன் இணைத்த ஜார்ஜ், பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால், அவரின் பேச்சுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது. ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த பி.சி.ஜார்ஜ் கூறும்போது, “அனில் அந்தோணியை யாருக்கும் தெரியாது. அவரை வாக்காளர்கள் முன்னர் அறிமுகப்படுத்துவது பெரிய பணி.

ஏ.கே.அந்தோணியின் மகன் என்பது மட்டும்தான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது. மற்றப்படி அவருக்கும் கேரளாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாஜகவினர் சுற்றித் திரிந்து அவரை, மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவரின் தந்தை காங்கிரஸுடன் இருக்கிறார். அவர் பாஜகவுடன் இருந்திருந்தால், நிலைமை நன்றாக இருந்திருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தை காங்கிரஸின் முன்னாள் முதல்வராக இருந்த நிலையில், மகன் பாகஜவில் களமிறங்கி காங்கிரஸுக்கே டஃப் கொடுக்க முயல்கிறார். மேலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி தாமஸ் ஐசக்கை போட்டியிட களமிறக்கியுள்ளது. இதனிடையே, மூன்று முறை காங்கிரஸ் எம்.பி.யான ஆன்டோ ஆண்டனி பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சிவேணுகோபால் அறிவித்துள்ளார்.

தந்தை காங்கிரஸின் முன்னாள் முதல்வராக இருந்த நிலையில், மகன் பாஜகவில் களமிறங்கி காங்கிரஸுக்கே டப் கொடுக்கும் வகையில் பிரச்சாரக் களத்தில் சுழன்று வருகிறார். இந்தத் தொகுதியில் சிபிஐ-எம் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணியின் வேட்பாளர் தாமஸ் ஐசக் களத்தில் உள்ளார். மூன்று முறை காங்கிரஸ் எம்பியான ஆன்டோ ஆண்டனியும் வலுவாக வலம் வருகிறார்.

புகழ்பெற்ற சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில், மூன்று கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், பாஜகவின் வியூகம் பத்தனம்திட்டா தொகுதியில் எடுபடுமா என்பதையும், அனில் அந்தோணிக்கு மக்கள் ஆதரவு கிட்டுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முந்தைய பகுதி > பாஜக முதல் பட்டியலில் ஒரே முஸ்லிம் வேட்பாளர்... யார் இந்த அப்துல் சலாம்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x