Published : 23 Feb 2018 01:57 PM
Last Updated : 23 Feb 2018 01:57 PM

மனித உரிமை, கருத்து, பேச்சு சுதந்திரக் குரல்வளை நெரிப்பு: இந்தியாவைத் தாக்கும் ஆம்னெஸ்டி அறிக்கை

பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகியோர் தங்கள் உயிரைப் பலிகொடுத்துள்ளனர், பல்கலைக் கழகங்களிலும் கருத்து, பேச்சு சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்று ஆம்னெஸ்ட் அமைப்பின் அறிக்கை இந்தியா மீது விமர்சனம் வைத்துள்ளது.

2017-ல் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது இந்திய அரசு வெளிப்படையாக தாக்கிப்பேசி வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பகைமையையும் வன்முறையையும் இந்திய அதிகார வர்க்கம் ஊட்டி வளர்த்து வருகிறது, என்று ஆம்னெஸ்ட் இண்டெர்நேஷனல் அமைப்பின் மனித உரிமைகள் அறிக்கை கண்டித்துள்ளது.

“கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் சட்டங்கள் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றன, பதிதிரிகையாளர்கள் மீதும் பத்திரிகைச் சுதந்திரம் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றன. பல பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் உயிரையும் பலிகொடுக்க நேரிட்டுள்ளது. பல்கலைக் கழகங்களிலும் கருத்துச் சுதந்திரம் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பீப்பிள்ஸ் வாட்ச் என்ற என்.ஜி.ஓ. அமைப்பின் அயல்நாட்டு நிதி உரிமத்தை புதுப்பிக்க அரசு மறுத்ததற்கு இந்திய உள்துறை அமைச்சகம் காரணமாக முன்வைக்கும் போது, இந்திய மனித உரிமைச் சாதனைகளை எதிர்மறையாக சித்தரிக்கிறது பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பு என்ற குற்றச்சாட்டை வைத்ததையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசியா முழுதுமே சிறுபான்மையினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது, அரசு இவர்களைத் தடுப்பதில்லை, இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை.

“இந்தியாவில் நாடு முழுதும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்கள் நடந்துள்ளன. இந்து தேசியவாத அரசாக இருப்பதால் இஸ்லாம் விரோத மனப்பான்மை வேரூன்றி வருகிறது. பசுக்குண்டர்களால் குறைந்தது 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர்” என்கிறது இந்த அறிக்கை.

பல நகரங்களில் இந்தச் செயல்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்தும் அரசு இந்த வன்முறைகளை அனுமதிக்கவில்லை என்று கூறவில்லை. கருத்து, பேச்சுச் சுதந்திரம் பெரும் குற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது, பத்திரிகையாளர்கள், வலைப்பதிவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய விரோதப்போக்கு பெருகிவருகிறது, முஸ்லிம்கள், தலித்கள் மீதான தாக்குதல் எதிர்ப்பு ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் உருவாக்கியபோதும் நடவடிக்கைகள் இல்லை, என்று ஆம்னெஸ்ட் அறிக்கை கண்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x