Published : 11 Mar 2024 04:38 AM
Last Updated : 11 Mar 2024 04:38 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், மஹுவா மொய்த்ரா, சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில்நடைபெற உள்ளது. இத்தேர்தலில்ஆளும் பாஜகவை தோற்கடிப்பதற்காக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. ஆனாலும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக காங்கிரஸ் கட்சி சில நாட்களுக்கு முன்பு கூறியது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்றுநடைபெற்றது. இதில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் இண்டியாகூட்டணி இல்லை என்பது தெளிவாகி உள்ளது. கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அனைத்துவேட்பாளர்களையும் அறிமுகம்செய்தார்.
18 பேர் பெண்கள்: வேட்பாளர் பட்டியலில் அபிஷேக் பானர்ஜி (டயமண்ட் ஹார்பர்), முன்னாள் கிரிக்கெட் வீரர்யூசுப் பதான் (பஹராம்பூர்), சத்ருஹன் சின்ஹா (அசன்சோல்), நடிகை ரச்சனா பானர்ஜி (ஹூக்ளி) உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் மொத்தம் 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
பஹராம்பூர் தொகுதி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோட்டையாக கருதப்படுகிறது. இவர் கடந்த 1999 முதல் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவருக்கு எதிராக யூசுப் பதானை களமிறக்கி உள்ளார் மம்தா. இந்த தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க திரிணமூல் மறுப்பு தெரிவித்ததும் கூட்டணி முறிவுக்கான ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இதுபோல, மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய புகாரில் எம்.பி. பதவியை இழந்த மஹுவா மொய்த்ராவுக்கு (கிருஷ்ணா நகர்) மீண்டும் வாய்ப்புதரப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் (பசிர்ஹட்), மிமி சக்கரவர்த்தி உட்பட 8 எம்.பி.க்களின் பெயர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான சந்தேஷ்காலி பகுதியை உள்ளடக்கிய இந்த பசிர்ஹட் தொகுதியில்,ஹாஜி நுருல் இஸ்லாம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது என்றுதொடர்ந்து கூறி வந்தோம். ‘தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இண்டியாகூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் விருப்பம்’ என்று பதிவிட்டுள்ளார்.
மொத்தம் உள்ள 42-ல் 3 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில், 2 தொகுதிக்கு மேல் வழங்க திரிணமூல் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் இதை ஏற்க தயங்கியதால் மம்தா தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது, அதில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT