பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல்: 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

லூதியாணா: பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வமாக உத்தரவாதம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை கடந்த மாதம் தொடங்கினர். ஆனால் அவர்களை ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கேஎம்எம்) மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம் - அரசியல் சாரா) ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இதையடுத்து, கேஎம்எம் மற்றும் எஸ்கேஎம் அமைப்பினர் பஞ்சாபின் 52 இடங்களில் நேற்று மதியம் 12 மணிக்கு ரயில் பாதையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல, மேலும் 5 அமைப்புகள் சார்பில் 10 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. இதனால் போராட்டம் நடைபெற்ற வழித்தடங்களில் செல்ல வேண்டிய பல ரயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன. மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

ஹரியாணா மாநிலத்தில் 3 இடங்களில் மட்டும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் போராட்டம் நடைபெற்ற இடங்களுக்கு செல்ல முயன்ற ஏராளமான விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதுபோல ராஜஸ்தான் (பிலிபங்கா), தமிழ்நாடு (தஞ்சாவூர்), மத்திய பிரதேசம் (ஜபுவா) உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கேஎம்எம் ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 21-ம் தேதி கனவுரி எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ஹரியாணா போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் சுப்கரண் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in