

புதுடெல்லி: டெல்லி குடிநீர் வாரியத்தின் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் உயிரிழந்தார். 12 மணி நேர மீட்பு பணிக்குப்பின் அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.
மேற்கு டெல்லியின் கேசோபூர் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 40 அடிஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று அதிகாலை 1.15 மணியளவில் ஒருவர் விழுந்து விட்டதாக போலீஸாருக்கு குடிநீர் வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அலுவலகத்துக்குள் திருட வந்தவர் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு ஆழ்துளை கிணறு தோண்டிவிழுந்தவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 12 மணி நேரத்துக்குப் பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு சுமார் 30 வயது இருக்கும் அவர் யார் என அடையாளம் காணப்படவில்லை.
இது குறித்து டெல்லி போலீஸார்கூறுகையில், ‘‘ஆழ்துளை கிணறுஅமைக்கப்பட்ட பகுதியில் சுற்றுச் சுவர் உடைந்த நிலையில் உள்ளது. இங்கு யார் வேண்டுமானாலும் நுழையும் நிலையில் உள்ளது. இங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லை. இது விபத்தா அல்லது சதி வேலையா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்’’ என்றனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்தடெல்லி குடிநீர் வாரிய அமைச்சர் ஆதிஷி கூறுகையில், ‘‘ கேசோபூர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள 40 ஆடி ஆழ்துளை கிணற்றில் ஒருவர் விழுந்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
ஆழ்துளை கிணறு அமைந்த பகுதி முற்றிலும் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பூட்டை உடைத்துதான் மீட்பு குழுவினர் உள்ளே நுழைந்தனர். இங்கு யாரும் நுழைவதற்கு வாய்ப்பில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் ’’ என்றார்.