Published : 10 Mar 2024 09:55 AM
Last Updated : 10 Mar 2024 09:55 AM

மார்ச் 14 அல்லது 15-ல் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு?

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்த உள்ளனர்.

இதையடுத்து மார்ச் 14 அல்லது 15-ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்10-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “ஜம்மு - காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு மதிப்பிடும். இந்தப் பணிகள் வரும் புதன் கிழமைக்குள் ( மார்ச் 13 ) முடிந்துவிடும். இதைத் தொடர்ந்து மார்ச் 14 அல்லது 15-ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தன.

ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவைக்கு கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது.

மேலும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதன் பிறகு அங்கு தேர்தல் நடைபெறவில்லை. இந்த ஆண்டில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆலோசனைக் கூட்டம்: டெல்லியில் தேர்தல் பார்வையாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா: தலைநகர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல், அனூப் சந்திர பாண்டே பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த சூழலில் அருண் கோயல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு வரை உள்ளது.

அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்கும் போதே பிரச்சினைகள் எழுந்தன. சட்டவிதிகளை மீறி அவர் நியமிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x