Last Updated : 27 Feb, 2018 05:37 PM

 

Published : 27 Feb 2018 05:37 PM
Last Updated : 27 Feb 2018 05:37 PM

குப்தா குடும்பம் - பாங்க் ஆப் பரோடா வலைப்பின்னல்: போலி நிறுவனங்கள் மூலம் ரூ.3,500 கோடி மோசடி பரிவர்த்தனை

இந்தியாவில் அடுத்தடுத்து வங்கி மோசடிகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை பயன்படுத்தி இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்தினர் செல்வம் குவித்த மோசடி விவகாரத்தில் இந்திய பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடாவும் சிக்கியுள்ளது. இந்த வங்கியின் மூலம் தவறான முறையில் பணப் பரிமாற்ற்ஙகள் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாங்க் ஆப் பரோடாவில் நடந்த தவறான பண பரிமாற்றம் நடந்தது எப்படி என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண பரிமாற்றம் நடந்தது எப்படி?

குப்தா குடும்பம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாங்க் ஆப் பரோடா வங்கியை முறைகேடான வகையில் பயன்படுத்தி வந்துள்ளது. குப்தா குடும்பத்திற்கு சொந்தமான உண்மையான நிறுவனங்களிடையே பண பரிவர்த்தனை நடந்துள்ளது. அதுமட்டுமின்றி போலி நிறுவனங்களுக்கும் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் குப்தாவின் நெருங்கிய நண்பரும், பல நிறுவங்களின் இயக்குனருமான சலீம் எஸ்ஸா என்பவரின் பெயரில் நடந்துள்ளன.

இந்த பரிமாற்றம் எதுவுமே பெரிய அளவில் தொழில் சார்ந்தோ அல்லது இதர வகைகளில் நடந்ததாக தெரியவில்லை. மாறாக முறைகேடான வகையில் போலி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள வங்கிகணக்குளுக்கு பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை எதற்குமே ஆவணங்கள் எதையும் பெறாமலேயே, பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி

2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பத்தாண்டுகளில் 3,500 கோடி ரூபாய் பணம் பல்வேறு போலி நிறுவனங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜோகனஸ்பெரக் பாங்க் ஆப் பரோடா வங்கி கிளைகளில் இருந்தே பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குப்தா மற்றும் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜுமாவின் உறவினர்கள் பெயரில் போலியான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஜுமாவின் மனைவிகளில் ஒருவரான குளோரியா நெஹிமி ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் என கூறப்பட்டு, அவருக்கு பாங்க் ஆப் பரோடாவில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அதிபர் மனைவிக்கு மாத சம்பளம்

இந்த கணக்கில் அவருக்கு மாத சம்பளம் என கணக்கு காட்டப்பட்டு, மாதம் தோறும் 9 லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் எதையும் பெறாமல் இந்த பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க நாட்டில் வங்கி ஒழுங்குமுறை சட்டங்களுக்கு எதிராக இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் கவனிக்கதக்கதாக கருதப்படுகின்றன. அதேசமயம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நடைபெறும் பண பரிரவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிப்புடனும், முறையான ஆவணங்கள் சரிபார்த்தும் நடைபெற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பாங்க் ஆப் பரோடாவில் நடந்த இந்த பரிவர்த்தனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஆனால் இந்த முறைகேடுகள் குறித்து பாங்க் ஆப் வங்கி நிர்வாகத்திடம் தி இந்து (ஆங்கிலம்) சார்பில் விளக்கம் கோரப்பட்டது. அதற்கு, சட்டவிதிகளின் படியே பாங்க் ஆப் பரோடாவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாங்க் ஆப் பரோடாவின் தென் ஆப்ரிக்க கிளைகளில் குப்தா குடும்பத்தின் மூலம் மொத்தம் 17,000 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவத்தின் சார்பில் அளிக்கப்படும் பில்களுக்கு எந்தவித ஆவணங்களையும் கேட்காமல், இணைய வழியில் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த மோசடி பண பரிவர்த்தனை வங்கியின் செயல்பாடுகளுக்கு எதிரானது என உணர்ந்து, 2016-ம் ஆண்டில் பிற வங்கிகள், குப்தா குடும்ப நிறுவனங்களுக்கான சேவை அளிப்பதை நிறுத்திக் கொண்டன. ஆனால் பாங்க் ஆப் பரோடா மட்டும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு முறைகேடாக சேவை அளித்துள்ளது.

 

யார் இந்த குப்தா?

தென் ஆப்பிரிக்காவில் பெரிய செல்வந்த குடும்பத்தில் ஒன்று குப்தா குடும்பம். தென் ஆப்ரிக்காவில் 1993ம் ஆண்டு வெள்ளை இன ஆதிக்க அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு அனைத்து மக்களும் அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் நடந்த பெரிய அளவிலான பொருளாதார மாற்றத்தால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு குடியேற ஆர்வம் காட்டினர்.

இதில் குப்தா குடும்பத்தினரும் ஒன்று. அதுல், ராஜேஷ், அஜய் ஆகிய மூன்று சகோதரர்களும், 1993ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்கா சென்று அங்கு குடியேறினர். சுரங்கம், விமான சேவை, மின்சார உற்பத்தி, தொழில்நுட்பம், கணினி மயமாக்கல், ஊடகம் என தற்போது மிகப் பெரிய தொழில் சாம்ராஜியத்திற்கு சொந்தகாரர்களாக திகழ்ந்தனர். தென் ஆப்ரிக்காவில் குடியேறியது முதலே இந்தியாவில் செய்வது போலவே உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு தங்கள் தொழிலை வளப்படுத்திக் கொண்டதாக புகார் உள்ளது.

குறிப்பாக முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுடம், குப்தா குடும்பத்தினருக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அதிபர் ஜுமாவின் மகன், மகள், மனைவிகளில் ஒருவர் என அவரது சொந்தங்கள், குப்தா குடும்பத்துடன் இணைந்து பல்வேறு தொழில்களை செய்தனர்.

அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் குப்தா குடும்பத்திற்கு தரப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு குப்தா குடும்பத்தினர் தங்கள் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டு அதற்கு பிரதி பலனாக ஜுமா குடும்பத்தினருக்கு சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x