Published : 09 Mar 2024 10:42 PM
Last Updated : 09 Mar 2024 10:42 PM

நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்: அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை 

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை தேசிய தேர்வுகள் முகமை நீட்டித்துள்ளது.

2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்.9ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 9ஆம் தேதி (இன்று) இரவு 11.55 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும் இரவு 11.50 மணி வரை நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப் பிரிவுக்கு ரூ.1,700, எஸ்சி/ எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன், ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்டதகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x