Published : 09 Mar 2024 09:30 PM
Last Updated : 09 Mar 2024 09:30 PM

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா

புது டெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் அரசியல் சூழலை பரபரப்பாக்கியுள்ளது. அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், இன்று (மார்ச் 9) முதலே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையர் குழுவில் மூவர் இடம்பெற வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அருண் கோயல்? - பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியவர். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற அவர் 2022 நவம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்தும் விலகியிருக்கிறார். இதற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுகொண்டதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x