Published : 16 Aug 2014 01:24 PM
Last Updated : 16 Aug 2014 01:24 PM

பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்; எச்.ராஜாவுக்கும் பதவி

பாரதிய ஜனதா புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சனிக்கிழமை வெளியிட்டார்.கட்சியின் தமிழக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பதவிக்கு பேசப்பட்ட எச்.ராஜா கட்சியின் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவராக அமித்ஷா கடந்த ஜூன் 9 ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளையும் தமிழகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களையும் அவர் சனிக்கிழமை அறிவித்தார்.

அவரது புதிய தேசிய நிர்வாகிகள் குழுவில் 11 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், 4 இணை பொதுச் செயலாளர்கள், 14 செயலாளர்கள், 10 தேசிய செய்தி தொடர்பாளர்கள் உட்பட 53 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் முதல்முறையாக 50 வயதுக்கு குறைந்தவர்கள் பெரும்பான்மை பெற்றுள்ளனர். மேலும், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.

11 துணைத் தலைவர்கள்

பாஜக துணைத் தலைவர்களாக மக்களவை எம்.பி.க்களான கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, பண்டாரு தத்தாத்ரேயா, சத்யபால் மாலிக், ஜார்க்கண்ட் முன்னாள் துணை முதல்வர் ரகுவர் தாஸ், புருஷோத்தம் ருபாலா, பிரபாத் ஜா, கிரண் மஹேஸ்வரி, வினய் சஹஸ்ரா புதே, ரேணு தேவி மற்றும் லக்னோ மேயர் தினேஷ் சர்மா ஆகியோருடன் ஏற்கெனவே இந்தப் பதவியில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8 பொதுச் செயலாளர்கள்

ஏற்கெனவே பொதுச் செயலாளர் களாக இருக்கும் ஜே.பி.நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி, முரளிதர ராவ் மற்றும் ராம் லால் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து சமீபத்தில் இணைந்த ராம் மஹாதேவ், முன்னாள் மகளிர் அணி தலைவி சரோஜ் பாண்டே, மாநிலங்களவை எம்.பி. பூபேந்தர் பாண்டே, ராம் சங்கர் கத்தரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செயலாளர்கள்

புதிய செயலாளர்களில் செய்தித் தொடர்பு பொறுப்பில் இருந்த காந்த் சர்மா, தமிழகத்தின் கட்சித் தலைவர் பதவிக்கு பேசப்பட்ட எச்.ராஜா, மேற்கு வங்கத்தில் கட்சிக்கு சில தொகுதிகள் கிடைக்க காரணமாக இருந்த சித்தார்த்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மஹாஜனின் மகள் பூனம் மஹாஜன், ஷியாம் ஜட்ஜு, அனில் ஜெயின், ரமேஷ் டெக்கா, சுதா யாதவ், ராம் சேகர் நேதாம், அருண் சிங், ஆர்.பி.சிங், ஜோதி துர்வே, தருண் சுக், ரஜனீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் அணி செயலாளரான அனுராக் தாக்கூர் மீண்டும் அந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். மகளிர் அணி தலைவியாக அவுரங்காபாத் மேயர் விஜயா ரஹாத்கர் அறிவிக்கப் பட்டுள்ளார்.

செய்தித் தொடர்பாளர்கள்

ஏற்கெனவே தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வகிக்கும் சையது ஷாநவாஸ் உசேன், சுதான்ஷு திரிவேதி, மீனாட்சி லேக்கி, எம்.ஜே.அக்பர், விஜய் சோங்கர் சாஸ்திரி ஆகியோருடன் புதிதாக நளின் கொஹிலி, ஜி.வி.எல்.என்.ராவ், அனில் பலூனி, சம்பித் பத்ரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த லலிதா குமாரமங்கலம் ஆகிய 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வருண் காந்தி நீக்கம்

வியப்பு தரும் நடவடிக்கையாக உ.பி. மாநிலம், சுல்தான்பூர் எம்.பி. வருண் காந்தி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பாஜக தேசிய நிர்வாக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சட்டமன்ற தேர்தல்களை மனதில்வைத்து உ.பி., டெல்லி, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியலை எதிர்க்கும் நமது கட்சியின் மீது புகார்கள் எழாமல் இருக்க, மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x