

மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினால் எதிர்க்கட்சிகளுக்கு முதலுக்கே மோசமாகிவிடும் அபாயம் உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி ‘இண்டியா’ கூட்டணியில் இணைந்துள்ளது.
இதில் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் அண்மையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (அர்ஜிடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், “மோடிக்கு குடும்பமில்லை” என்று தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருந்தார். முன்னதாக, 2018-ஆம் ஆண்டில் ”காவலாளி ஒரு திருடன்” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுக் கூட்டத்தில் தாக்கி பேசினார்.
இதனை நினைவுகூர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது: இத்தகைய கோஷங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதனால் நமக்கு எத்தகைய பலனும் இல்லை. உண்மையில் இதுபோன்ற கோஷங்கள் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.
நமக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. கோஷங்களால் வாக்காளர்கள் திருப்தி அடைவதில்லை. அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்னவென் பதைத்தான் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழி, வேளாண்மை சிக்கல்களுக்கான தீர்வு, கிராம பொருளாதாரத்துக்கு உயிரூட்டுவதற்கான பாதை இதைதான் அவர்கள் தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறார்கள். யாரோ ஒருவருக்கு குடும்பம் இருக்கா இல்லை என்பதல்ல மக்களின் பிரச்சினை.
இப்படி மோடியின் சொந்த வாழ்க்கையை தாக்கி பேசி, வழிமறிக்க ஆளில்லாத கோல்போஸ்டை அவருக்கு கொடுத்துவிட்டோம். அதை சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் தனது குடும்பம் என்று பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது நம்மிடம் அதற்குப் பதில் இல்லையே.
நாம் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்துமட்டுமே குரல் கொடுக்க வேண்டுமே தவிர்த்துத் தனிப்பட்ட தாக்குதல் அரசியலில் ஈடுபடக் கூடாது. காவலாளி, அதானி-அம்பானி, ரஃபேல், பரிவார் இவையெல்லாம் எடுபடாது. இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.