சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த டெல்லி போலீஸ் காவலர் சஸ்பெண்ட்

சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த டெல்லி போலீஸ் காவலர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

புதுடெல்லி: சாலையில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் சிலரை போலீஸ் ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இந்தர்லோகில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஏராளமானோர் கூடிய நிலையில், மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக சிலர் சாலையில் நின்று தொழுகை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த டெல்லி போலீஸார், கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதுகுறித்த வீடியோ காட்சியில், ஒரு போலீஸ் காவலர் முட்டிபோட்டு தொழுது கொண்டிருந்தவர்களை எட்டி உதைத்து தாக்குகிறார். போலீஸாரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடம் கோபத்தைத் தூண்டியது. உடனடியாக அவர்கள் போலீஸாரைச் சூழ்ந்து கொண்டு அவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. இம்ரான் பிரதாப்கர்கி, "தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை டெல்லி போலீஸ் வீரர் எட்டி உதைப்பது மனித நேயத்தின் அடிப்படை பற்றிய புரிதல் இல்லாததைக் காட்டுகிறது. அந்த போலீஸ்காரரின் இதயத்தில் நிரம்பி இருப்பது என்ன மாதிரியான வெறுப்பு? டெல்லி போலீஸார் அந்த நபர் மீது வழக்குப் பதிந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்தச் சம்பவம் குறித்து பதில் அளித்துள்ள இணை ஆணையர் (வடக்கு) மீனா கூறுகையில், "அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தப் போலீஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, இச்சம்பவத்தினை அடுத்து சட்ட ஒழுங்கமைதியை பாதுகாக்கும் வகையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in