

தேர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் வீரர்களைப் போல தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று மாணவர்களுடான உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுடன் ’பரிக்ஷா பர் சார்ச்சா ’என்ற தலைப்பில் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றினார். புதுடெல்லியில் தல்காட்டோரா அரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.
இதில் நாடு முழுவதும் 10 வகுப்பு, 12 வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பொதுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழும்பினர்.
பிரதமர் மோடியுடன் மனிதவள மேம்பாட்டுத்துறை பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.
மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த மோடி, "நீங்கள் சிறிது நேரம் என்னை பிரதமராக நினைக்காமல் உங்களுடைய நண்பானாக நினைத்துக் கொள்ளுங்கள். இன்று நான் ஒரு மாணவன். நீங்கள் 10க்-கு எவ்வளவு மதிப்பெண் எனக்கு வழங்குகிறீர்கள் என்று பார்க்கலாம்.
மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் புன்னகையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற விவாதம் எப்போது நம்மிடையே உள்ளது. தேர்வுகளை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். வீரர்களைப் போல தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். நமக்கு நாமே சவால்விட்டு கடினமாக உழைத்தால் தன்னம்பிக்கை தானாக வரும். நாம் நம்மை எப்போது சிறப்பாக நினைத்து கொள்ள வேண்டும்" என்றார்.
தேர்வை மன அழுத்தம் இல்லாமல் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாணவர் ஒருவர் கேள்வி எழுப்ப, "தன்னம்பிக்கைதான் நம்மை சுற்றியுள்ள அழுத்தத்தை எதிர் கொள்வதற்கான வழி. ஒன்றின் மீதான கவனம் என்பது நீங்கள் கற்று கொள்வதால் கிடைப்பது அல்ல. ஒவ்வொருவரும் எதன் மீதாவது கவனம் கொண்டிருப்போம் அது பாடலாக இருக்கலாம், படிக்கும்போது இருக்கலாம், நமது நண்பர்களுடன் பேசும்போது இருக்கலாம். உங்களது கவனத்திறன் மேம்பட யோக பயிற்சிகளை கடைபிடியுங்கள் . நீங்கள் மற்றவர்களுடன் போட்டியிடுவதற்கு பதில் உங்களுடன் போட்டியிடுங்கள். எப்போதும் உயிர்ப்புடன் ஒரு மாணவனை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்” இவ்வாறு மாணவர்களுடன் உரையாற்றினார்.