Published : 06 Mar 2024 05:36 AM
Last Updated : 06 Mar 2024 05:36 AM

கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாட்டிலேயே முதன்முதலாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையம்.படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில்மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் தொழில்நுட்ப கட்டுமான வல்லமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும். நீருக்கு அடியிலான இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும். கவி சுபாஷ் - ஹேமந்த் முகோபாத்யாயா மெட்ரோ பிரிவு, ஜோகா - எஸ்பிளனேடு பாதையின் ஒரு பகுதியான தரதலா - மஜர்ஹெட் மெட்ரோபிரிவு ரயில் சேவையையும் பிரதமர்மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.இது, நகர்ப்புற போக்குவரத்தை மாற்றிஅமைப்பதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும். நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மெட்ரோ, போக்குவரத்து திட்டங்கள்: இதுதவிர, நாடு முழுவதும் பல முக்கியமான மெட்ரோ மற்றும்விரைவான போக்குவரத்து திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தியா முழுவதும் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதற்காக விரிவான முன்முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x