Published : 06 Mar 2024 07:49 AM
Last Updated : 06 Mar 2024 07:49 AM
கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62). இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று அவர் தனதுராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதி பதவியை நான் இன்று ராஜினாமா செய்துவிட்டேன். வரும் 7-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். நான் பாஜகவில் இணைந்த பிறகு எந்த மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவில் தொடர்வேன். திரிணமூல் காங்கிரஸ் போன்ற குற்றவாளிகள் நிறைந்த கட்சிக்கு எதிராக பாஜக மட்டுமே போராடுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந்திருக்கலாம். ஆனால், எனக்கு சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்கட்சிக்கு சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் போன்ற குடும்பம் ஆளும்கட்சியில் சேர்வது எந்தப் பயனும்இல்லை என்று நான் அறிந்துகொண்டேன்.
2009-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்ததுதான் 2024-ல்திரிணமூல் காங்கிரஸுக்கு நடக்கப் போகிறது. மக்களுக்கான கட்சியாக பாஜக இருக்கிறது. பாஜகவின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கட்சியில் இணைய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாள்களாக விடுப்பில் இருக்கும் அபிஜித்தின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு பொறுப்பில் இருந்து அவரை விடுவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT