Published : 12 Feb 2018 04:49 PM
Last Updated : 12 Feb 2018 04:49 PM

4 ஏக்கரில் மாணவிகள் செய்த விவசாயம்: நெல் அறுவடை முடிந்து ஏழை மாணவர்களுக்கு உணவாகிறது

கர்நாடக மாநிலம், மங்களூரு உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவிகள் வயலில் வேளாண்மை செய்து நெல் அறுவடை செய்துள்ளனர்.

இதன் கிடைக்கும் அரிசியை ஏழை மாணவர்களின் மதிய உணவுக்கு இலவசமாக அளித்துள்ளனர்.

மங்களூரு நகரில் அரசு கலைக் கல்லூரியில் 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு என்.எஸ்.எஸ். பிரிவில் இருக்கும் 250 மாணவிகள் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்த எண்ணினர்.

அதன்படி, தங்களின் என்.எஸ்.எஸ். ஒருங்கினைப்பாளரும், பேராசிரியருமான நவீன் என் கெனேஜ் அறிவுறையின் படி, ஒரு வயலை லீசுக்கு எடுத்து விவசாயம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக அருகில் உள்ள கொனேஜ் கிராமத்தில் ஒரு 4 ஏக்கர் நிலத்தை ரூ. 80 ஆயிரத்துக்கு லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் அரிசியை ஏழை மாணவர்களின் உணவுக்காக அளிக்க முடிவு செய்தனர். இதை தங்களின் செயல் திட்டமாகவும் வைத்தனர்.

அதன்படி, மாணவிகள் லீசுக்கு எடுத்த அந்த 4 ஏக்கரில் 5 வகையான பிளாட்கள் இருந்தன. இதில் 2 பிளாட்கள் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 3 பிளாட்களில் 6 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 4 ஏக்கர் நிலத்தில் கால்பங்குக்கு மேல் விவசாயம் செய்யப்படாத நிலமாகவே இருந்தது.

இந்த நிலத்தை பண்பட்ட நிலமாக மாற்றுவதில் இருந்தில், நீர் பாய்ச்சுவது, உழுதல், சேற்று உழுதல், வரப்பு வெட்டுதல், நாற்று நடல், உரமிடுதல், களைஎடுத்தல் என அனைத்து பணிகளையும் 250 மாணவிகளே செய்தனர்.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மாணவிகள் வேளாண் பணியைத் தொடங்கினர். இவர்களின் கடின உழைப்பில் விளைச்சல் அமோகமாக வந்தது. 4 ஏக்கர் நிலத்தில் அறுவடை முடிந்து தற்போது 800 கிலோ அரிசியை மாணவிகள் பெற்றுள்ளனர்.

தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த இந்த அரிசியை தங்கள் கல்லூரியில் ஏழை மாணவ, மாணவிகள் மதிய உணவுத் திட்டத்துக்கு இலவசமாக அளித்துள்ளனர். இந்த அரிசி வரும் 14-ம் தேதி முதல்பயன்பாட்டுக்கு வருகிறது. ஏறக்குறைய ஒருமாத உணவுக்கு இந்த அரிசி பயன்படும்.

இது குறித்து என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் கொனாஜே கூறுகையில், “அடுத்த ஆண்டும் இதேபோன்று வயலில் வேலை செய்து நெல் பயிரை விளைவிக்க மாணவிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு மாணவிகள் தங்களுக்கு தேவையான நிதியான ரூ. 80 ஆயிரத்தை என்எஸ்எஸ் அமைப்பும், கர்நாடக ராஜ்ய ரெய்தா சங்கமும் அளித்தன. வயலில் அறுவடை முடிந்து கிடைக்கும் வைக்கோல், உள்ளிட் பொருட்களை ஏழை விவசாயிகளின் வளர்க்கும் மாடுகளின் உணவுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு பருவகாலத்தில் 10 ஏக்கரில் விவசாயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் அரிசி ஏழை மாணவர்களின் நீண்ட நாள் உணவுத் தேவையை நிறைவு செய்யும். காய்கறிகளும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x