Published : 26 Aug 2014 06:24 PM
Last Updated : 26 Aug 2014 06:24 PM

முசாபர்நகர் கலவரம்: குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ-வுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரத்தை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ-வுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான முடிவை உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடலாம் என்று கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 60 பேர் பலியாகினர், 90-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஏராளமான மக்கள் கலவரத்துக்கு பயந்து கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கலவரம் தொடர்பாக போலி வீடியோ காட்சிகளை இணையத்தில் பரவ விட்டு, அதன் மூலம் கலவரத்தை தூண்டிவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் மீது குற்றம்ச்சாட்டபட்டு, கைது செய்யப்பட்டார். பின்னர் வெளியே வந்தார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சங்கீத் சோமின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததை அடுத்து, உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சங்கீத் சோமுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், கலவரத்திற்கு பொறுப்பானவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிப்பது ஆச்சரியமாக உள்ளது. இதைவிட அந்த மக்களை வேறு எப்படியும் காயப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

இதே கருத்தை குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், எ.ஐ.ஆர் பதிவில் குற்றம்சாட்டபட்டவராக உள்ளவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவது சரியா என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தரிக் அன்வரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x