Published : 05 Mar 2024 09:18 PM
Last Updated : 05 Mar 2024 09:18 PM
புது டெல்லி: திமுக மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.
திமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றில், "இந்தியா ஒரு நாடு இல்லை. இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்திய எப்போதுமே ஒரு தேசமாக இருக்கவே முடியாது. ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே கலாச்சாரம் போன்ற பண்புகள் இருந்தால் மட்டுமே அது ஒரு நாடு. இந்தியா நாடு இல்லை; அது ஒரு துணைக் கண்டம்" என்று பேசியிருந்தார். மேலும், கடவுள் ராமர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆ.ராசா கூறியிருக்கிறார் என்று பாஜக அவர் மீது குற்றம்சாட்டியிருந்தது. | விரிவாக வாசிக்க > “அன்று உதயநிதி, இன்று ஆ.ராசா... இவை திமுகவின் வெறுப்புப் பேச்சுகள்!” - பாஜக குற்றச்சாட்டு
‘நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள்’ என்று சுய பிரகடனம் செய்ததாக ஆ.ராசா பேசியிருப்பதும் வெறுப்புப் பேச்சு என்று பாஜக தொழில்நுட்பத் துறை பிரிவு தலைவர் அமித் மாள்வியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினே கூறுகையில், "நான் 100 சதவீதம் அவரின் கருத்துடன் உடன்படவில்லை. இந்த இடத்தில் நான் அவரின் கருத்தைக் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் பொதுவானவர். அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்றே நான் நம்புகிறேன்.
ராமர் என்பது வாழ்க்கைக்கான லட்சியம், ராமர் என்பது கண்ணியம், ராமர் என்பது நீதி, ராமர் என்பது அன்பு. நான் அவரது (ஆ.ராசா) பேச்சைக் கண்டிக்கிறேன். அது அவரது பேச்சாகவே இருக்கலாம். நான் அதை ஆதரிக்கவில்லை. பேசும் போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT