‘பெங்களூருவின் முக்கிய இடங்கள் டார்கெட்’ - கர்நாடக அரசுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

‘பெங்களூருவின் முக்கிய இடங்கள் டார்கெட்’ - கர்நாடக அரசுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட் அருகில் செயல்பட்டுவந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரப‌ல உணவகத்தில் கடந்த 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் மீண்டும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஷாஹித் கான் என்பவர் பெயரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், உள்துறை அமைச்சர் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

அந்த மின்னஞ்சலில், "வரும் சனிக்கிழமை மதியம் 2.48 மணிக்கு பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள் மற்றும் பேருந்துகள், ரயில்களில் வெடிகுண்டு வெடிக்கும். குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும்" என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in