

புதுடெல்லி: இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சர்வதேச விதிகளை மீறி தனது எல்லையை விரிவாக்கும் சீனாவின் முயற்சி உள்ளிட்ட காரணங்களால் ஜெர்மனியின் ராஜதந்திர நடவடிக்கையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளைத் தாண்டிபிற நாடுகளுடனான நட்புறவை பலப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா சிறந்த நட்பு நாடாக இருக்கும் என கருதுகிறோம். ஏனெனில் இரு நாடுகளின் பொது நோக்கமும் ஒரே மாதிரியாக உள்ளன.
இந்தியாவுடனான ராஜதந்திர உறவை பலப்படுத்துவதில் இதற்கு முன்பு தயக்கம் காட்டினோம். ஆனால் இப்போது, ராணுவபயிற்சி, ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். இவ்வாறு பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்தார்.