

புதுடெல்லி: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு மார்ச் 12-ம் தேதிக்கு பிறகு காணொலி மூலம் ஆஜராக தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2021-ம்ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் தனியாருக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசுசெயல்பட்டதாகவும் அதிகளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் டெல்லிதுணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துஇருப்பதாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர்அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், 8 முறையும் அவர் ஆஜராகவில்லை. சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட சம்மன் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தற்போது கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. அமலாக்கத்துறை அனுப்பிய இந்த சம்மனும் சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டிய கேஜ்ரிவால் வரும் 12-ம் தேதிக்கு மேல் சம்மனுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வீடியோகான்பரன்சிங் மூலம் அமலாக்கத் துறை முன் கேஜ்ரிவால் ஆஜராக உள்ளதாகவும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வழக்கில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மார்ச்16-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே 8 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் ஆஜராக மறுத்ததால் அதற்கான விளக்கத்தையும் அவர் இம்முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கும்படி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.