Published : 05 Mar 2024 07:25 AM
Last Updated : 05 Mar 2024 07:25 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்களில் 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து ரூ.1,10,600 கோடிமதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி சில தினங்களில் வெளியிடப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், மொத்தம் 10 நாட்களில் தமிழகம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார், ஜம்மு-காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத்,ராஜஸ்தான், டெல்லி ஆகிய12 மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்து பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதுதொடர்பான தகவலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதன்படி, நேற்று தெலங்கானாவின் அடிலாபாத் நகருக்குச் சென்ற அவர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தெலங்கானாவில் மட்டும் ரூ.56,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் தமிழகத்தின் கல்பாக்கத் துக்கு வந்த அவர் கல்பாக்கம் பாவினி அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று (மார்ச் 5) மீண்டும் தெலங்கானா செல்லும் பிரதமர் காலை 11 மணிக்கு சங்காரெட்டி மாவட்டத்தில் ரூ.6,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
பின்னர் அவர் ஒடிசா மாநிலம் செல்கிறார். மாலை 3.30 மணிஅளவில் ஜாஜ்பூரிலுள்ள சண்டிகோலே பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.19,600கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
இதன் பின்னர் அவர் மார்ச் 6-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் செல்கிறார். கொல்கத்தாவில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.இதற்கு அடுத்தபடியாக பிஹார் செல்லும் பிரதமர் மோடி, பேட்டியா பகுதியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
5 மாநிலங்களில் 3 நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மொத்தம் ரூ.1,10,600 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT