Published : 11 Aug 2014 08:41 AM
Last Updated : 11 Aug 2014 08:41 AM

2-ஜி ஊழல் வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்படுவார்: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

2-ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் சேர்க்கப்படுவார். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இந்தியப் பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, ஆட்சிக்கு வந்த பின்னர் அதேபோல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறதே?

நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்து இருக்கோம். தற்போதைய நிலையில் எல்லோரும் இந்த கேள்வி கேட்கிறார்கள். சரியான தீர்வை அரசு எடுக்கும்.

2-ஜி ஊழல் வழக்கு தற்போது எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது?

நீதிமன்றத்தில் கனிமொழி, ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் சேர்க்கப்படுவார். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் உங்களுக்கு இணக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி உங்களுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறதே?

சிலர்தான் அவ்வாறு செயல்பட்டு வியாபாரம்போல் செய்து வருகிறார்கள். அதனால் என்ன நடந்துவிட்டது. ஒன்றும் ஆகப் போவது இல்லை. இலங்கையுடனான நமது உறவு என்பது சீனாவும், பாகிஸ்தானும் உள்ளே நுழையாதவாறு இருப்பது நல்லது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கடந்த ஆண்டே ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினேன். மீனவர்கள் அனைவரும் தொழிலாளர்கள். இந்திய கடற்பகுதியில் மீன் கிடைக்காததால் அவர்கள் எல்லை தாண்ட வேண்டிய நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்தேன். கைது செய்யப்பட்ட மீனவர்களை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விடுவிப்பதாகச் சொன் னார். அதன்படி, மீனவர்களை விடுவித்துவிட்டார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ராஜபக்சேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம்.

ஆளுநர் பதவிக்கு நீங்கள் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறதே?

ஆளுநர் பதவி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் கேட்கவில்லை.

யூ.பி.எஸ்.சி. தேர்வில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

இப்பிரச்சினையை அரசு சரி செய்துவிடும். ஆங்கிலம் என்பது ஒரு சர்வதேச மொழி. தேர்வுக்கு தாய் மொழி மட்டும் போதாது. ஒரு பத்தியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யத் தெரியாமல் இருந்தால் எப்படி. தற்போது உள்ள மொழிப்பற்று உணர்வு குறையட்டும் என அரசு காத்திருக்கிறது.

சமஸ்கிருத வார விழா கொண்டாட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

இந்த நாட்டில் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்க உரிமை உண்டு. யாரும் இந்தி படிக்கக் கூடாது, சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என நிர்பந்திக்கக் கூடாது. மொழிகளை படிப்பதற்கான வாய்ப்பைக் கேட்டால் வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

இலங்கை ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்யும் வகையில் வெளியான படம் தொடர்பாக உங்களது கருத்து என்ன?

நான்தான் ஏற்கெனவே இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவறு நடந்துவிட்டதாகத் தெரிவித்தேன். அதன் பின்னர் அவரும் மன்னிப்பு கோரினாரே. நீங்கள்தான் (பத்திரிகைகள்) ஏதேதோ எழுதுகிறீர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x