வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும்: ரூ.2 ஆயிரம் வழங்கிய பிரதமர் மோடி வேண்டுகோள்

வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும்: ரூ.2 ஆயிரம் வழங்கிய பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தன்னு டைய பங்களிப்பாக அவர் ரூ.2 ஆயிரம் வழங்கி உள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரம் கடந்த 2017-ல்நடைமுறைக்கு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 19(1)(a) பிரிவுக்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிராக இது இருப்பதாகக் கூறி தடை விதித்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் நேற்று பாஜகவுக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை வழங்கி உள்ளார். இதற்கான ரசீதை அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன், “வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற நமது முயற்சியை பலப்படுத்துவதற்காக பாஜகவுக்கு நன்கொடை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோல, நாட்டு மக்கள் அனைவரும் நமோ செயலி மூலம் பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

வருமான வரிச் சட்டத்தின்படி நன்கொடையாக வழங்கும் தொகைக்கு வரி விலக்கு உள்ளது என அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் 100-வது சுதந்திர தினம் (2047) வருவதற்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது. இதற்காக, ‘விக்சித் பாரத் @20475: வாய்ஸ் ஆப் யூத்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி உள்ளிட்டவற்றில் மேம்பாடு அடைவதுதான் இதன் நோக்கம். இந்த இலக்கை எட்ட இளைஞர்களின் சக்தியை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in