

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பக்கோடா கடை வைக்க உதவக் கோரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும் மாநில அமைச்சர் மோஷின் ராஜாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடியிடம் பாஜக வாக்குறுதி அளித்தபடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோடி, "பக்கோடா கடை நடத்தி நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றவரே" எனக் கூறினார்.
இது நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் பக்கோடானாமிக்ஸ் என்று பாஜகவை கிண்டல் செய்தன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பக்கோடா கடை வைக்க உதவக் கோரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும் மாநில அமைச்சர் மோஷின் ராஜாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
அமித் மிஸ்ரா என்ற இளைஞர் எழுதிய அந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தக் கடிதத்தில் அஸ்வின் மிஸ்ரா கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக ஒரு பக்கோடா கடை தொடங்க விரும்புகிறேன். பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் எனக்கு நிதியுதவி பெற்றுத்தர பிரதமர் மோடியிடம் அமைச்சர்களாகிய நீங்கள் சிபாரிசு செய்யுமாறு வேண்டுகிறேன்.
தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் நேர்காணலை பார்த்தநாள் முதல் எனது வேலைதேடும் படலத்தை நான் முடித்துக் கொண்டேன். பிரதமர் தந்த யோசனை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பக்கோடா கடை தொடங்கினால் என் குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதித்துடன் என்னால் சிலருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால், இதை செயல்படுத்த என்னிடம் முதலீட்டுக்கு தேவையான பணம் இல்லை. வங்கிகளை அணுகினேன். ஆனால், எனக்கு பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்க எந்த ஒரு வங்கியும் முன்வரவில்லை. ஆனால், அரசாங்கமோ முத்ரா திட்டத்தின் கீழ் 10 கோடி பேர் பயனடைந்துள்ளதாகக் கூறுகிறது. எனவே, பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் எனக்கு நிதியுதவி பெற்றுத்தர பிரதமர் மோடியிடம் அமைச்சர்களாகிய நீங்கள் சிபாரிசு செய்யுமாறு வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் அமேதி பிரிவு பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் எழுதிய கடிதம் பாஜகவின் பொய்களை தோலுரித்துக் காட்டுவதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அச்சே லால் விமர்சித்துள்ளார்.