

போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் 195 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில்,மத்திய பிரதேசத்தில் இருந்து 24 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்திய பிரதேச அனைத்து மக்களின் இதயங்களிலும் பிரதமர் மோடி வாழ்கிறார். இதனால், இங்குள்ள 29 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும். இவ்வாறு சவுகான் கூறினார்.
மத்திய பிரதேசத்தின் முதல்வராக சவுகான் 2005-ம் ஆண்டு பதவியேற்றார். முன்னதாக இவர் ஐந்துமுறை விதிஷா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இறுதியாக கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் விதிஷா தொகுதியில் போட்டியிட சவுகானுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விதிஷா தொகுதியில் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் (1991), சுஷ்மா சுவராஜ் (2009 மற்றும் 2014), செய்தி நிறுவன வெளியீட்டாளர் ராம்நாத் கோயங்கா (1971) போன்ற முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் ம.பி.யில் 28 இடங்களை பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.