

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த முறையாவது சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்து கூட்டணி மாறாமல் இருக்க ‘ஆல் தி பெஸ்ட்’ என ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் (என்டிஏ). பாஜகவின் உற்ற தோழனாக நீடிப்பேன் என்று பிரதமர் மோடியிடம் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் உறுதியளித்தார். அடிக்கடி பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி என்று செயல்பட்ட நிதிஷ்குமாரை கிண்டல் செய்யும் விதமாகராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “ அடிக்கடி கூட்டணி மாறுவதை வழக்கமாக கொண்டுள்ள நிதிஷ் குமார் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்க நல்வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கடந்த ஜனவரியில் ஒன்பதாவது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் தாவியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறையும், 10 ஆண்டுகளில் 5 முறையும் கூட்டணி விட்டு கூட்டணி மாறி நிதிஷ் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் ராஷ்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் அரசை காட்டாட்சி என்று விமர்சித்து முதல்முறையாக முதல்வர் ஆனார் நிதிஷ்.
இதுவரை 8 முறை பிஹார்முதல்வராக அவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த சமயத்தில் பாஜக,காங்கிரஸ், ஆர்ஜேடி என அவ்வப்போது கூட்டணியை மாற்றிக் கொண்டே இருந்தவர் நிதிஷ்.
கடந்த 2013-ல் பிரதமர் மோடியை பிரதமராக தேர்வு செய்யும் பாஜகவின் முடிவுக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் நிதிஷ். இதையடுத்து என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது அதே கூட்டணியில் இணைந்து கடந்த ஜனவரியில் முதல்வராக பதவியேற்றார்.