Published : 03 Feb 2018 04:03 PM
Last Updated : 03 Feb 2018 04:03 PM

பட்ஜெட் 2018: சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் மத்திய அரசு!

வியாழனன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையை தொடங்க எழுந்து நின்றவுடனேயே மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்ஜெட் என்ற பெயரில் வெளிவரும் சமூக வலைத்தள எதிர்வினைகளைக் கண்காணிக்க சிறு குழு ஒன்றை அமைத்தார்.

வழக்கத்துக்கு மாறான நீண்ட பட்ஜெட் உரை விவாதங்களையும் எதிர்வினைகளையும் கிளப்பியது, இதன் பெரும்பகுதிகளை தகவல் தொழில் நுட்ப நிபுணர்கள் 6 பேர் கொண்ட குழு பட்ஜெட்டைக் குறிப்பிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைக் கண்காணித்தது.

கண்காணிப்புத் தாக்கம்:

“நாங்கள் பொதுவாக பட்ஜெட் குறித்த ஆன்லைன் உரையாடல்களைக் கவனித்தோம் குறிப்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தோம், வலைப்பதிவர்களின் கண்ணோட்டம் என்னவென்பதைப் பார்த்தோம். அரசு திட்டங்கள் குறித்த மக்களின் எதிர்வினை என்ன, இதன் மூலம் அரசு தன் தொடர்புறுத்தலை இன்னும் கூர்மைப் படுத்த உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இது செய்யப்பட்டது.

விவசாய வருவாய் அதிகரிக்கும் என்பது பற்றியும் மருத்துவக் காப்பீடு பற்றியும் ஏகப்பட்ட உரையாடல்கள், கருத்துகள் கிளம்பின. இதில் பெரிய அளவில் கருத்துகள் குவிந்தன” என்று இந்தத் திட்டத்தில் இருந்த ஒரு நபர் தெரிவித்தார்.

உரையாடல்களின் அளவு, பயனாளர் இருக்கும் பகுதி ஆகியவற்றையும் இந்தக் குழு தடம் கண்டுள்ளது. கருத்துகள் சாதகமானதா, பாதகமானதா, நடுநிலையானதா என்பதையும் கண்காணித்தது இந்தக் குழு.

உதாரணமாக வருமான வரி விவகாரத்தில் நிலையான கழிவு 40,000 நீங்கலாக மத்தியதர வகுப்பினருக்கும், சம்பள பிரிவினருக்கும் இந்த பட்ஜெட் எந்த ஒரு சகாயமும் செய்யவில்லை என்பது குறித்து ஏகப்பட்ட கருத்துகள் கிளம்பின, இது அரசுக்கு கிடைத்த உள்ளீடாகும், அடுத்த முறை பட்ஜெட்டுக்கு இது உதவும், என்றார் இன்னொரு அதிகாரி.

அதாவது அரசுத்திட்டங்கள் எப்படி வரவேற்போ, எதிர்ப்போ பெறுகிறது என்பதைக் கண்டுணர்ந்து அதன் படி செயல்பட இது உதவும் என்று கண்காணிப்பு பற்றி பல்வேறு நேர்மறை அபிப்ராயங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த அறுவர் குழுவின் அறிக்கை அந்தந்த துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம்தான் இந்த குழு அமைக்கப்பட்டது.

மேலும் சோஷியல் மீடியா கம்யூனிகேஷன் ஹப் என்ற ஒன்று பிராந்திய மையங்களில் தொடங்கப்படலாம் என்றும், இது தொடர்பாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒலிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனம் (BECIL) என்ற பொதுத்துறை நிறுவனம் இத்திட்டத்துக்கான மென்பொருள் சப்ளைக்காக டெண்ட்ர்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களும் ஒன்றுதானா என்பது தெளிவாக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x