‘சர்ச்சை கருத்துகளை தவிர்ப்பீர்’ - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி | படம்: எக்ஸ் தளம்
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி | படம்: எக்ஸ் தளம்
Updated on
1 min read

புதுடெல்லி: சர்ச்சை கருத்துகளை தவிர்க்குமாறும், டீப்-ஃபேக் விவகாரத்தில் கவனமுடன் இருக்குமாறும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். தனது அமைச்சரவை சகாக்களுடன் நடைபெற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தயார் நிலை குறித்தும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான விரிவான செயல் திட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் நிதானத்தை பிரதானமாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல்.

மேலும், குரலினை மாற்றும் டீப்-ஃபேக் விவகாரத்தில் விழிப்புடன் இருக்குமாறும் பிரதமர் மோடி, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல். மக்களிடம் அரசின் திட்டங்கள், கொள்கைகளை எடுத்து கூறுமாறும் பிரதமர் மோடி தெரிவித்தார். ‘சென்று வெற்றியுடன் வாருங்கள். மீண்டும் சந்திக்கலாம்’ எனவும் அமைச்சர்களிடத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் புரி, கிரண் ரிஜிஜு, அர்ஜுன் மேக்வால் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் முன்வைத்து பேசிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வரவேற்றதாக தகவல். அதோடு வரும் மே மாதம் புதிய ஆட்சி அமைந்ததும் முதல் நூறு நாட்களுக்கான அரசின் திட்டம், செயல்பாடு குறித்தும் அமைச்சர்கள் இதில் பேசியதாக தகவல். மத்திய அரசின் 'வளர்ந்த இந்தியா - 2047' இலக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in