

புதுடெல்லி: கேரள கடற்கரையிலிருந்து 220 கி.மீ முதல் 440 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் யூனியன் பிரதேசம் லட்சத்தீவு. இங்கு 3 குழுக்களாக 36 தீவுகள் உள்ளன.
இங்குள்ள மினிகாய் தீவில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற பெயரில் புதிய கடற்படை தளத்தை இந்திய கடற்படை வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் முன்னிலையில் இந்த கடற்படை தளம் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் ராணுவ மற்றும்வணிக கப்பல்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க முடியும். நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த‘எம்எச் 60ஆர் ஷீ ஹாக்’ என்ற ஹெலிகாப்டரும் கடற்படையில் வரும் 6-ம் தேதி இணைக்கப்படுகிறது.
கொச்சியில் உள்ள கடற்படையின் விமான தளமான ஐஎன்எஸ் கருடாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்த ஹெலிகாப்டர் மூலம் கடற்படையின் கண்காணிப்பு திறன் மேலும் வலுப்பெறும் என கேப்டன் எம் அபிஷேக் ராம் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்படை கமாண்டர்கள் மாநாடு, இந்த முறை ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்களில் நடைபெறவுள்ளது.