Published : 03 Mar 2024 06:37 AM
Last Updated : 03 Mar 2024 06:37 AM

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் முழுமையாக இணைந்தது: கரண் சிங் மகிழ்ச்சி

ஜம்மு: இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து, ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அந்த சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி, இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

அதனால், ஜம்மு காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் முயற்சி தடுக்கப்பட்டது. எனினும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க, 370-வது சட்டப்பிரிவின் கீழ் வழிவகை செய்யப்பட்டது. இது தற்காலிக ஏற்பாடுதான் என்று அப்போது சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டது. இதையடுத்து 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, 370-வது சட்டப்பிரிவை நீக்கி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உறுதி செய்தது. இதை மகாராஜா ஹரிசிங்கின் மகன் டாக்டர் கரண் சிங் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த அரசியல் தலைவரும், காஷ்மீர் பாரம்பரியத்தின் பாதுகாவலருமாக அறியப்படும் டாக்டர் கரண்சிங் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு சந்தேகமே இல்லாமல் எந்தத் தடையுமின்றி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் முழுவதுமாக இணைந்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு இந்தப் பகுதியில் வளர்ச்சிக்கான அலை உருவாகி உள்ளது. பல வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் புதிய சகாப்தமாக ஜம்மு காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்.

என்னுடைய தந்தை ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த போது, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு என 3 விஷயங்கள் மட்டும்தான் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இப்போது 370-வது பிரிவை நீக்கி இந்தியாவுடன் முழுமையாக காஷ்மீர் இணைக்கப்பட்டுவிட்டது. இப்போது எந்த தனித்தன்மையும் இல்லை. அதேவேளையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். ஜனநாயக கொள்கைகள் மற்றும்நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த விரைவில் அங்கு தேர்தல் நடைபெற வேண்டியது கட்டாயம். இவ்வாறு டாக்டர் கரண் சிங் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில்திறப்பு பற்றி கேள்வி எழுப்பிய போது, ஒரு இந்துவாக மகிழ்ச்சிஅடைவதாகவும் இந்த விஷயத்தை அரசியல்வாதிகள் அரசியலாக்க கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகுதான் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் கரண் சிங் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கரண்சிங் வன்மை யாக கண்டித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x