

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் வரவேற்பு விழா நிகழ்வில் தனது மனைவியுடன் கவுதம் அதானி கலந்து கொண்டார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு விமரிசையாக இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய வரவேற்பு விழா நிகழ்வு மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித், ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான், சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராம் சரண், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதனால் ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வில் தனது மனைவியுடன் கவுதம் அதானி கலந்து கொண்டார். பாதுகாவலர்கள் புடை சூழ நிகழ்விடத்துக்கு அதானி வந்திருந்தார். முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி என இருவரும் இந்தியாவின் முன்னணி செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.