பெங்களூரு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லியில் உஷார் நிலை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்த நிலையில், தேசியத் தலைநகர் டெல்லியில் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் குறிப்பாக டெல்லியிலுள்ள சந்தை பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தும்படி மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், “டெல்லியுள்ள சந்தைச் சங்கங்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்து இடமான நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் சந்தை வளாகங்களில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமராக்கள் வேலைசெய்வதை உறுதி செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மற்றொரு அதிகாரி கூறுகையில், “டெல்லி காவல்துறை அதன், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் வெண்டிகுண்டு கண்டறியும் குழுவை உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது” என்றார்.

முன்னதாக, பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என‌ மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர் ஒருவர் கை கழுவும் இடத்தில் வைத்துவிட்டுச் சென்ற கைப்பை ஒன்றில் டைமர் பொருத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் மற்றும் வெடிகுண்டுகள் சட்டத்தின் கீழ் உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in