பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடிப்பு: காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடிப்பு: காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே' என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது.

இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ(25) ஆகியோரும் 7 வாடிக்கையாளர்களும் படுகாயம் அடைந்தனர். வாடிக்கையாளர்களில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஆவர்.காயமடைந்த 9 பேரும் ஒயிட்ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உணவகத்தில் பற்றி எரிந்த தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

முதலில் சிலிண்டர் வெடித்ததாகவும், மர்ம பொருள் வெடித்ததாகவும் கருதப்பட்டது. ஆரம்பத்தில் போலீஸாரும் அதே கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

ஆனால் உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திவ்யா ராகவேந்திர ராவ் கூறும்போது, “சமையல் செய்யும் பகுதியில் இருந்த சிலிண்டர் எதுவும்வெடிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் உணவு உண்ணும் பகுதியிலேயே குண்டு வெடித்துள்ளது. இதனை சிசிடிவி காட்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம். மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தை தேர்வு செய்து இந்த சதிச் செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கர்நாடக போலீஸ் டிஜிபி அலோக் மோகன், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு படை அதிகாரிகள் ஆகியோரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் சிதறிக் கிடந்த வெடிப்பொருட்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். அங்கு சிதறிக் கிடந்த தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

டிஜிபி மோகன் அலோக் கூறும்போது, “இந்த சம்பவம் நடந்தபோது இந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் போன்றவற்றை சேகரித்துள்ளோம். தடயவியல் முடிவுகள் வந்த பிறகு மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும்'' என்றார்.

முதல்வர் எச்சரிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “சிசிடிவி கேமராவில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பையை சாப்பிடும் மேஜைக்கு அடியில் விட்டுச் சென்றது பதிவாகியுள்ளது. கஃபேவில் வெடித்த குண்டு கடந்தஆண்டு மங்களூருவில் வெடித்த குண்டைப் போல சக்தி குறைவானது. இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களை அனுமதிக்க முடியாது. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிப்போம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in