Last Updated : 09 Feb, 2018 09:37 PM

 

Published : 09 Feb 2018 09:37 PM
Last Updated : 09 Feb 2018 09:37 PM

நீண்ட காலமாக பணிக்கு வராத 13,000 பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவு

மத்திய ரயில்வே துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல் ஏமாற்றிய சுமார் 13,000 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அத்துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய ரயில்வே துறையில் நாடு முழுவதிலுமாக சுமார் 13 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலரும் பணிக்கு வராமல் ஏமாற்றி வரும் நிலை தொடர்ந்துள்ளது. சட்டவிரோதமாக விடுப்பு எடுத்ததுடன் அதற்கான ஊதியங்களையும் பெற்று வந்துள்ளனர். இவர்களை கணக்கு எடுப்பு நடத்தி அடையாளம் காணும்படி மத்திய ரயில் துறை மற்றும் நிலக்கரி துறையின் அமைச்சரான பியூஷ் கோயல் உத்தரவிட்டிருந்தார்.

இதன் பெயரில், சுமார் 13,000 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதிலும் உள்ள தனது அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி அவர்கள் விடுப்பு எடுத்துள்ளனரா என சரிபார்க்கவும் சிறப்பு உத்தரவையும் இட்டுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘விசாரணைக்கு பின் அவர்கள் பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் பலர் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், அதிகாரிகள்

அனுமதியின்றி அவர்களின் கீழ் பணியாற்றுபவர்கள் எவரும் சட்டவிரோதமான நீண்ட விடுப்புகளை எடுக்க முடியாது’ எனத் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக செய்த தனது அமைச்சரவை விரிவாக்கத்தில் நிலக்கரி அமைச்சரான பியூஷ் கோயலுக்கு ரயில்துறை கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. அப்போது முதல் அவர் ரயில்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கடைநிலை ஊழியர்களை அவர்கள் வேலையைச் செய்ய விடாமல் சில உயரதிகாரிகள் தங்கள் வீட்டுப் பணிகளுக்கு அமரித்திய விவகாரத்திலும் பியூஷ் கோயல் அமைச்சரான பிறகு சோதனை செய்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x