தெலங்கானா மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விரையும் மக்கள்; ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம்

தெலங்கானா மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விரையும் மக்கள்; ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம்
Updated on
2 min read

தெலங்கானா மாநிலத்தில் 19-ம் தேதி ஒரு நாள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, சென்னை யில் வசிக்கும் தெலங்கானா மக்கள், ரயில்களில் சாரை, சாரையாக சொந்த ஊரை நோக்கிப் படையெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பிறகு முதல்முறையாக அங்கு நலத்திட்டங்களை வழங்கு வதற்காக ‘ஒரு நாள் தீவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு’ புதன்கிழமை நடக்கிறது. இந்த கணக்கெடுப்பில் 4 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால், இந்த கணக்கெடுப்பில் தாங்கள் விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வசித்து வரும் தெலங்கானா மக்கள், தங்கள் மாநிலத்தை நோக்கி விரை கிறார்கள். சென்னையில் வசித்து வரும் தெலங்கானா பகுதி மக்களும், இந்த கணக்கெடுப்பில் விடுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் சனிக்கிழமை மாலையில் இருந்தே ரயில்களில் கூட்டம், கூட்டமாக செல்லத் தொடங்கிவி்ட்டனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்லும் ஹை தராபாத் எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் மற்றும் எழும்பூரில் இருந்து புறப்படும் கச்சிகுடா எக்ஸ் பிரஸ் ஆகிய மூன்று ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் இதனால் கூட்டம் நிரம்பி வழிகிறது. கால் வைக்கக்கூட இடம் இல்லாத நிலையில் மக்கள் நெருக்கியடித்துச் சென்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:

ஏ.சீனு (புதுவண்ணாரப்பேட்டை)

நான் கடந்த 10 வருடங் களாக சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் வசித்து வருகிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தெலங்கானா பகுதியில் குடும்ப உறுப்பினர் கணக்கெடுப்பு நடத்தப் படுவதாக தகவல் தெரிந்தது. எங்கள் குடும்பம் வாரங்கலில்தான் வசித்து வருகிறது. எனவே, இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள நான் புறப்படுகிறேன். இந்த கணக் கெடுப்பின் மூலமே அரசு திட்டங்களை செயல்படுத்த முடியும். குடும்ப அட்டை, வீடு, வேலைவாய்ப்பு சலுகை உள்ளிட்டவை பெறவும் இது முக்கியமானதாக இருக்கும். இந்த கணக்கெடுப்புக்கு ஒரு நாள் போதுமானதுதான்.

எம்.சிவராமன் (செம்பியம்)

நான் கடந்த 3 வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறேன். கணக்கெடுப்பின்போது அங்கு இல்லையென்றால் எங்களுக்கு குடும்பஅட்டை உள்ளிட்ட முக்கிய மான அரசு சலுகைகள் கிடைக்காது. எனவே, நான் ஊருக்கு புறப்பட்டு செல்கிறேன். புள்ளிவிவரம் சேகரிக்க ஒருநாள் போதுமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், அவசர, அவசரமாக நாங்கள் புறபட்டு செல் வது கஷ்டமாக இருக்கிறது.

ஆர்.பிரியா (அயனாவரம்)

நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு குடும்பத்தோடு வசித்து வருகிறோம். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் நான் பணியாற்றி வருகிறேன். ஆனால், எங்கள் உறவினர்கள் செகந்திராபாத்தில் இருக்கின்றனர். அரசு சலுகை அறிவிக்கவும், புதிய திட்டங்களை அறிவிக்கவும் இந்த கணக்கெடுப்பு முக்கியமானதாக இருக்கிறது என்ப தால் புறப்பட்டு செல்கிறோம். இதை விடுமுறை நாட்களில் வைத் திருந்தால் எங்களைப் போன்ற பணியாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

நாகேந்திரரெட்டி (பெரம்பூர்)

கடந்த 3 ஆண்டுகளாக நான் சென்னையில் வசித்து வருகிறேன். புதிய மாநிலமாக தெலங்கானா உருவெடுத்துள்ளதால், எங்களை போன்றவர்களுக்கு அரசு புதிய சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

எம்.லோகேஷ் (மேற்கு மாம்பலம்)

நான் சென்னையில் பொறியியல் படித்து வருகிறேன். கணக்கெடுக் கும்போது ஊரில் இருக்கவேண்டும் என்று எனது பெற்றோர் அழைத்ததால் ஊருக்கு விரைகிறேன்.

வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்

இது குறித்து தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சத் யாதேவிடம் கேட்டபோது, ‘‘ஒரு மொழி பேசும் மக்கள் வசித்து வந்த மாநிலம், துரதிருஷ்டவசமாக 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, அங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சினையில் கவனம் செலுத்தி, போதிய திட்டப்பணிகளை வகுத்து செயல்படுத்த வேண்டும். அதைவிட்டு, வரும் 19-ம் தேதி யன்று ஒரே நாளில் தீவிர குடும்ப உறுப்பினர் கணக்கெடுப்பு நடத்த வுள்ளனர்.

இப்போது, இது அவசியமானது அல்ல. அங்குள்ள மக்களின் கல்வி, சுகாதாரம், வேளாண்மைத் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டாலும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்வர் களும் அங்கு அரசு ஊழியர்களாக இருக்கின்றனர். ஒரே நாளில் எப்படி அங்குள்ள 10 மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியும்? ஹைதராபாத் உள்ளிட்ட பல் வேறு நகரங்களில் வசிப்போர் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இப்படி ஒரே நாளில் கணக்கெடுப்பு நடத்தினால், மற்றவர்கள் எப்படி வந்து கலந்து கொள்ள முடியும்?’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in