Published : 26 Feb 2018 12:02 PM
Last Updated : 26 Feb 2018 12:02 PM

பாஜக தலைவர் அமித் ஷாவை கேள்விகளால் துளைத்த விவசாயிகள்: பதில் கூற முடியாமல் மழுப்பல்

கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாஜக தலைவர் அமித் ஷா, விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் மழுப்பினார். சில இடங்களில் கேள்விகளை தவிர்க்கும் வகையில் விவசாயிகளைச் சந்தித்தும் பேசாமல் சென்றார்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாஜக தீவிரமாக களப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடக, ஆந்திரா எல்லைப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து பிரச்சினைகளையும், குறைகளையும் கேட்டு வருகிறார்.

அதன்படி, கலாபுர்க்கி மாவட்டத்துக்கு அமித் ஷா நேற்று சென்று இருந்தார். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். ஆனால், அவரிடம் பெரும்பாலான விவசாயிகள் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மட்டும் அமித் ஷாவிடம் குறைகள் கேட்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது, ஹம்னாபாத் பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து அமித் ஷா குறைகளைக் கேட்டார். அங்கிருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சித்தராமப்பா அனந்தூர், பாஜக தலைவர் அமித் ஷாவிடம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எப்படி, விவசாயிகள் பிரச்சிகளை சமாளிக்கிறது, எதிர்கொள்கிறது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், கார்பரேட் நிறுவனங்களின் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு நிதி இருக்கிறது. ஆனால், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய உங்கள் அரசிடம் பணம் இல்லை. நாங்கள் எல்லாம் சாதாரண விவசாயிகள், சாமானிய மக்கள்தான், நாங்கள்தான் வாக்களித்து உங்களை ஆட்சியில் அமரவைத்தோம், தொழில்அதிபர்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அமித் ஷா சற்று அமைதியானார்.

அதன்பின், அமித் ஷா பதில் அளிக்கையில் “ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தி இருக்கிறது என்று பொய்யான தகவல்களை கூறி வருகிறார். ஆனால், எந்தவிதமான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி செய்யவில்லை.தொழில் அதிபர்களுக்கு உதவும் வகையில் வரிவீதங்களை மட்டுமே குறைத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அதேசமயம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து விவசாயிகளின் கேள்விக்கு அமித் ஷா பதில் அளிக்கவில்லை.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துகிறோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை செய்யவில்லை என்றும் விவசாயிகள் கேட்டனர். அதற்கு அமித் ஷா கூறுகையில், “ எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் முக்கிய பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒன்றரை மடங்கு விலை உயர்வு தருவதை பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சிவப்பு பருப்பு கொள்முதலில் தடை கொண்டு வருவது குறித்தும், இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு வரி விதிப்பது குறித்தும் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x