உத்தராகண்ட் சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்டவரின் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு: வீடு ஒதுக்கப்படும் என பாஜக எம்.பி. உறுதி
புதுடெல்லி: உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை, டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள் மீட்டனர்.
இவர்களில் ஒருவர் வகீல் ஹாசன். இவரது வீடு வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இதில் வகீல் ஹாசன் வீடும் இடிக்கப்பட்டதால் அவரும் அவரது குடும்பத்தினரும் நடைபாதையில் அமர்ந்திருந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த வடகிழக்கு டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, ‘‘சுரங்க மீட்பு பணியில் நாங்கள் வகீல் ஹாசனை பாராட்டியபோதே, அவர் வீடு கோரிக்கையை எழுப்பினார். அவருக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க முயன்றபோது, அவர் குடியிருக்கும் பகுதி ஆக்கிரமிப்பு பகுதி என தெரியவந்தது. அதனால் அவருக்கு உடனடியாக வீடு கட்டிக் கொடுக்க முடியவில்லை. அவருக்கு சட்டப்பூர்வமான இடத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விரைவில் வீடு வழங்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்’’ என்றார்.
எனினும் டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என வகீல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
